Thursday, January 21, 2010

களி கூருங்கள்! கை தட்டுங்கள்!

கரிசல் காட்டுக் காவியத்தின் கதாநாயகர்கள்
இன்று வென்று நிற்கிறார்கள்!

இளம் காலையை நாம் இனம் காணுமுன்
இளம் நாற்றுக்காய் இமை திறந்தவர்கள்...
சுட்டெரிக்கும் சூரியனின் சிவந்த கரங்களைச்
சுமந்து, சுமந்து தன் மேனி கருத்தவர்கள்...
பச்சைப் பட்டாடையை நிலமகள் அணிந்திடப்
பாசன நீரில் நின்று தன் பாதம் பிளந்தவர்கள்...
நெல்மணியைக் கண்ணாரக் காணும் சுகத்திற்காய்
நெல்மணியோடு சேர்த்துத்தன் நெற்றிமணி விதைத்தவர்கள்...

கரிசல் காட்டுக் காவியத்தின் கதாநாயகர்கள்
இன்று வென்று நிற்கிறார்கள்!
களி கூருங்கள்! மாந்தர்களே... கை தட்டுங்கள்!!

இன்று...

உள்ளத் தெழுச்சியைத் தெள்ளியதோர் அக்னியாக்கி
உழவின் பயனை உகந்தநல் அரிசியாக்கி
இன்பக் களிப்பையெல்லாம் இனிமையான பாகாக்கி
சுற்றத்தை, நட்பையெல்லாம் இணைத்துப் பருப்பாக்கி-நல்
எண்ணங்கள் தன்னையள்ளி மணமான நெய்யாக்கிப்
பொங்கல் செய்து பொங்கிவரும் நன்றிப்பெருக்கையெல்லாம்
உடனுழைத்த உதயவனுக்கும், உழுதநல் மாடுகளுக்கும்
உரியதாக்கிய உத்தமர்கள்! உழுதுவாழும் உழவர்கள்!!

இவர்கள்...
கரிசல் காட்டுக் காவியத்தின் கதாநாயகர்கள்...
இன்று வென்று நிற்கிறார்கள்!-அதோ
அந்தப் பொங்கல் ஆரவாரத்தின் பூரிப்பில்
களி கூருவோம்! நாமும்... கை கோர்ப்போம்!